Sunday, June 6, 2010

நான் எழுதிய புதுக் கவிதை....

பல நாட்களாய் இதயத்தில் சேமித்து வைத்திருந்த கவிதையை எழுத்துக்களால் வடிக்க எத்தணித்தேன். பேனையைத் தொட்டு ஏட்டில் பதித்தேன். கவிதை இப்படி மலர்;ந்தது.

சொல்லுக்கு சொல் சேர்த்து
வார்த்தைகளாய் ஒன்று சேர்த்து
கவிதையாய் புனையும்
அழகியே – நீ
எழுதும் கவிதைக்காய்
அப்பாவிப் பேனையின்
விழிகளில் கண்ணீரை
பொழிய வைக்கிறாயே – மற்றவர்களைப் போல்
நீயூம் சுயநலவதியா....?

ஆரம்பமே இன்று கண்ணீரை பறைசாற்றுகின்றதே – பேனையே வேண்டாம் உன் சகவாசம் என்றெண்ணிய என் விரல்கள் பேனையை வைத்து விட்டு
கனணி முன் சென்று - இதயத்தில்
உதித்த கவிதையை - ஸ்கிரீனில் பதிய
முற்பட்டேன் - கடைசியாய் என் கவிதை இப்படித்தான் முடிந்தது....

கவிதை வரைவதாய்க் கூறி
நீ சுமக்கும் வேதனைகளை
விரல்களின் நுனி கொண்டு
அடித்தடித்துத் துன்புறுத்துகிறாயே...
நானென்ன நீ சுமக்கும் காயத்திற்கு ஒத்தடமா-
அன்றி உன் பதிவுகளை பகிரங்கப்படுத்தும்
கீபோர்ட்டா??

என்ன நினைத்து எனைத் தொட்டாலும்
காயப்படுவது என் மேனியல்லவே – எல்லோர்
விரல்களாலும் துன்புறுத்தப்பட்டவள் - என்னை
நீயாவது விட்டு வைக்கக் கூடாதா?

கடைசியாய் உன்னிடம் ஒரு விண்ணப்பம்...
தட்டித் தட்டிக் கொல்லும் உன் விரல்களுக்கு விடைகொடுத்து,
ஒரேயடியாய் கொன்றிடச் செய்யும் உன் கரங்களுக்கு
அனுமதி கொடு – என்னை
ஒரு மூலையில் எறிந்து விடச் சொல்லி....

இனி எங்கே கவிதை வரைவது எனக்கூறி விடைபெற்றேன் நானும் உங்களிடமிருந்தல்ல, கண்ணீரைச் சொறியும் பேனையிடமிருந்தும், காயங்களைப் பகிரும் கீபோர்டிடமிருந்தும்....

-ஹிமாயா ஹமீட்,
கொழும்பு-12.