

பிறக்கும்போதே நிச்சயிக்கப்பட்டுவிட்ட சத்திய உறவா இது. முந்நூறு ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்தது போன்ற பந்தம் இருவரிடமும்! அம்மா தாலாட்டினாள்~ கண் உறங்கியது. அன்பான இவளின் காதலோ சொற்களாலன்றோ உயிர் மயங்கியது.
தந்தையின் கரங்களோ ஆண்டுகள் பல பத்திரப்படுத்தி வைத்திருந்தும், சிந்தையில் இனித்திடும் என்னவனின் கரங்களால் நொடிப் பொழுதிலே என்னை நானே தொலைக்க வைத்துக் கொண்டிருக்கின்றனவே வெட்கித்தவித்தாள் மங்கையவள்.
உபவாசம் என்று உண்ணாமல் இருந்ததுண்டு பல தினங்கள்! இவனோடு உறவான பின்னர் இவனை எண்ணாமல் ஒரு நொடியும் இருக்க முடியவில்லையே என்னால்? ஆச்சரிய மழை அவளுக்குள்!
அப்பப்பா... என்னவொரு பலம் ~ மலர் என்பார். மாதுங்கனி என்பார். மன்மத பாணம் மனதில் துளைத்துவிட்டால் சொன்னதெல்லாம் மறந்திடுவார். முகம் இரத்தச் சிவப்பாகி தனக்குள்ளே முறுலித்தாளவள்.
பூச்சொரியும் புன்னகைதான்! ஆனால் அந்தப் புன்னகைக்குள் பொல்லாத ஆசைப் பொறியிருக்கும்.
வீழ்ந்துவிட்டால் மீட்சியில்லை. அதுமட்டுமோ.... மீண்டாலும் மகிழ்ச்சியில்லை என்றெண்ணி கற்பனை பேரூவகையில் நனைந்திருந்த அவளுக்குள், நனவின் உண்மை நிலை உதிக்கவே, மெய் கலங்கிப் போனது அவளுக்கு.
"பருந்துக்குக் கிடைத்துவிட்டது விருந்து. வருந்தும் என் மனதுக்கு இனி கிடைக்குமோ மருந்து? இரண்டு நாட்கள் அள்ளி அருந்திக் கிடந்த இன்பத்தின் ருசி நாவைவிட்டுப் பிரியுமுன்னே, புண்பட்டு கள மண்ணிலே வீழ்ந்தானே என் மன்னனும் உடன் வீரனாய் மாண்டானே, யார் கண் பட்டதோ? கடவுளே இன்பத்தை ரசிக்க முடியாது உன் கண்கள்தான் பட்டதோ..." துடித்திட்டாள்-துவண்டுதான் போனாள்.
"அத்தான், அத்தான்.." இறுதி அழைப்பாய் அவள் குரல் படுகளத்தில் திசையெங்கும் எதிரொலித்தவாறிருக்க, மன்னவன் உடல் தாங்கியிருந்த அம்போ அவளை வாவென்று அழைத்திடவே மன்னவன் அருகே மங்கயவள் உயிரோடு சேர்ந்து உடலும் உடன் கட்டையேறியது...
(கற்பனையில் உதித்திட்ட உண்மை...)
No comments:
Post a Comment