
வழக்கம் போலவே இன்று நான் வழமையாக ஏறும் தனியார் பேரூந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். அப்போது அந்த பேரூந்தில் என்னைத் தவிர நான்கு பேரே அமர்ந்திருந்தார்கள். நானோ பிற்புரமாக இருந்து மூன்றாவது ஆசனத்தில் அமர்ந்துதவாறு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டேன். அப்படியே எனது சிந்தனைகளும் என்னைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தவேளை, திடீரென்று என் சிந்தனையைக் கலைக்குமுகமாக ஒருவர் என்னை மோதியவாறு எனக்கருகில் அமர்ந்தார். திடுக்கென்று திரும்பிப் பார்த்தேன். அப்போது ஒரு சிங்களப் பெண் என்னைப் பார்த்துச் சிரித்தவாறு "சோரி" என்றார். நானும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு ஜன்னல் பக்கமாகத் திரும்பியவேளை, என்னை நோக்கி ஹாய் குட்மோனிங் என்று கூறினார். சற்று யோசித்தவாறே பதில் கூறியதும், "உங்களுக்கு தயக்கமில்லையென்றால் நீங்கள் எனது நண்பி என்று சொல்லமுடியுமா" என்றார். நான் "ஏன் எதற்கு" என்று கேட்கும் போதே, எமது ஆசனத்திற்கு எதிராக இருந்த ஆசனத்தில் ஒரு ஆண் வந்தமர்ந்தார். அவரைப் பார்த்தால் ஒரு 50-60 வயதுக்கிடைப்பட்டவர் என்று விளங்கியது. அமர்ந்ததும் அந்த பெண்ணை நோக்கி "கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினால் நானும் உங்களுடனேயே வரலாம். நானும் அங்கே தான் செல்கின்றேன்..." என்று கதைத்தார். 23 வயதையொத்த அந்த யுவதி, "இல்லை நீங்கள் போகலாம். இவர் என்னுடைய நண்பிதான். இவருடன் நான் போகிறேன். நீங்கள் போலாம்..." என்றார். அவருடைய வார்த்தையில் பதட்டமும், விரக்தியும் கலந்திருந்தது. குறிப்பிட்ட நபர் இந்த யுவதியின் தந்தையாக இருக்கும் என்று நினைத்த எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர் என்னை நோக்கி, "உங்களுக்கு இவரைத் தெரியுமா என்று கேட்கவே" நானும் ஒரு பெண் என்ற வகையில், ஆம் இவர் எனது நண்பிதான். உங்களுக்கேதும் பிரச்சினையா? என்று சற்று அதட்டலாகக் கேட்டேன். "இல்ல சும்மாதான்.." என்று கூறியவர் அந்த யுவதியைப் பார்த்து "நான் போகிறேன்" என்று கூறிவிட்டு, சென்றான். சென்றவன் பஸ்ஸை விட்டு இறங்காது, ஆகவே பின்னால் இருந்த ஆசனத்தில் அமர்ந்ததை நான் அவதானித்துவிட்டேன். எனக்கு மனதுக்குள் பயமேற்பட்டு விட்டது. "வீண் பிரச்சினையை விலை கொடுத்து வாங்கிவிட்டேனோ? என்று எனது மனது சொன்னாலும்ää தினமும் பயணிக்கும் பேரூந்து என்பதால் ஏதோ பிரச்சினை என்றால், சாரதியிடம் அல்லது நடத்துனரிடம் சொல்லிவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் என்னை நோக்கி "பாருங்களேன் பானந்துறை பஸ் எங்கே இருக்கு என்று கேட்டதுக்கு என் பின்னாலேயே வந்துட்டான். நல்லவன் என்று நினைச்சுத்தான் அவன்கிட்ட பாதைக்கு வழி கேட்டேன். இப்படி பின்னாலேயே வருவான் என்று நினைக்கவில்லை. போதாக் குறைக்கு என்னோடயே வருவதாகவும் சொன்னான். நான் ரொம்பவே கஷ்டப்பட்டு வந்தேன். நல்ல வேளையாக உங்களைக் கண்டதில் தப்பித்துக் கொண்டேன் என்றார். "அதோ அந்த நபர் பின்னால் தான் இருக்கிறார் என்று கூறியதும், அந்தப் பெண் திரும்பிப் பார்த்தார். அப்போது பஸ் நடத்துனர் டிக்கெட் உடைக்க அருகில் வந்ததும் நான் அவரிடம் இந்தப் பெண்ணின் நிலைப் பற்றிக் கூறினேன். அப்போது அவர் குறிப்பிட்ட நபரிடம் சென்று பஸ்ஸிலிருந்து இறங்கும் படி கூறவே அந்த நபரும் இறங்கிவிட்டார். வழமையாகவே என்னிடம் டிக்கெட் உடைக்காத காரணத்தினால் குறிப்பிட்ட யுவதியிடமும் டிக்கெட் உடைக்காது நடத்துனர் எம்மைக் கடந்து சென்றுவிட்டார். அந்த யுவதி என்னைப் பார்த்து "தாங்ஸ்" என்று கூறினார். எனக்கு அவரைப் பார்த்ததும் பாவமாக இருந்தது. நான் கேட்டேன் "உங்களுக்குப் பாதை தெரியாதா? நீங்கள் எங்கே போகின்றீர்கள் வீட்டுக்கா?" என்று. அவர் அதற்கு "இல்லை. என்னோட போய் பிரண்ட்ட மீட் பண்ண போறன். மாதத்தில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில ஆபிஸ்ல லீவ் எடுத்துவிட்டு நாங்கள் மொரட்டுவையில தான் மீட் பண்ணுவம். வத்தளையிலிருக்கும் என்னை பார்க்க மொரட்டுவையைச் சேர்ந்த அவரால் வரமுடியாது. எனவே நாங்கள் மொரட்டுவையிலேயே மீட் பண்ணுவம் என்றார். பிறகு சொன்னார் "இந்த மனிதன்ட பார்வையே சரியில்ல. பாதை தெரியாதென்றால் காட்டிவிட வேண்டியதுதானே. எனக்கு நிறைந்த நண்பர்கள் கொழும்பில் இருக்கிறார்கள். நீங்கள் மட்டும் இல்லையென்றால் நான் அவர்களுக்கு போன் செய்து விடயத்தைச் சொல்லியிருப்பேன். அவரனின் நேரம் நல்லது என்று கூறிவிட்டு என்னைப் பார்த்து சிரித்தார்.
அந்தப் பெண்ணுடன் தொடர்ந்தும் கதைக்க விரும்பாத நான் என் பாட்டில் ஜன்னல் வழியே வெளியே எனது கவனத்தைச் செலுத்தினேன். முழுக் கனவமும் ஜன்னலுக்கு வெளியே சென்றுவிட்டது. அந்த யுவதி பேரூந்து புறப்பட ஆரம்பித்ததிலிருந்து தொலைபேசியில் கதைக்கத் தொடங்கியவர், நான் இறங்கும் போதும் கதைத்தவாறே இருந்தார்.
யாரோ ஒருவருக்கு உதவி செய்த திருப்தியோடு பஸ்ஸை விட்டு இறங்குவதற்காக முன்னால் வந்த வேளையில், பஸ் நடத்துனர் "சகோதரி நீங்க அந்தப் பெண்ணைக் காப்பாற்றுமாறு சொன்னதால் தான் அந்த மனிதனை வெளியே அனுப்பினேன். அந்தப் பெண் எப்போதும் இப்படித்தான். யாராவது ஒருவருடன் பாதையில் கதைப்பது. பிறகு அவர்களிடம் தேவையான உதவியைப் பெற்றதும், இப்படி யார் மூலமாகவோ விரட்டி விடுவது. உங்களை வருடக்கணக்கில் தெரியும் என்பதால்தான் இந்த உதவியைச் செய்தேன். இனிமேல் இப்படி கண்டவருக்காக உதவி கேட்காதீர்கள். பிறகு உங்கள் சகோதரரிடம் முறையிட வேண்டியேற்படும்" என்றார்.
இது எதுவுமே அறியாத நான் தொடர்ந்தும் அந்த இடத்தில் நிற்க மனமின்றி, "இனி இப்படி எதுவும் நடக்காது. உதவி செய்ததற்கு நன்றி, என்று கூறிவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கிவிட்டேன்.
"யாரோ எவரோ ஊர், பெயர் தெரியாத ஒருவருக்கு பெண் என்ற காரணத்தினாலும், மனிதாபிமானம் என்ற ரீதியிலும் உதவிச் செய்யப் போனதில் எனக்கு இதுவும் தேவை, இன்னமும் தேவை" என்று என் மனம் என்னைத் திட்டித் தீர்த்தது. உடன் முடிவெடுத்தேன் "இனி முகம் தெரியாத நபர் அது யுவதியாக இருக்கட்டும், கிழவியாக இருக்கட்டும் உயர் போகும் நிலையில் கூட யாராவது உதவி கேட்டு வந்தால் கூட எந்த உதவியும் நான் செய்யப் போவதில்லை" என்று.
No comments:
Post a Comment