Sunday, May 2, 2010

மயங்கிடாதே பெண்ணே... ஆண்வர்க்கம் பொல்லாதது...!


மாமரத்தின் கிளை மீது கனிகள் - உன் மாந்தளிர் மேனியிலும் ஆயிரம் கனிகள். பசுந்தளிராய் இருக்குமந்தப் பாதம் - எனை நாடிவந்து நொந்தல்லோ மாயும் - என்று கவித்துவமாய்ப் பாடிடும் ஆடவர், வாடிடும் பூவாய் நமை வர்ணித்து அவர்களோ வண்டாகி கண்ணுக்கெட்டும் அத்தனை பூக்களுக்குள்ளும் தேனெடுத்து மகிழ்கின்றனர்.

"மின்னல் இடை எனை உடைத்திடக்கூடும். வாழைப் பெண் உன் வெண்முகத்து வேல் விழிகளின் பாய்ச்சல் என் இதயமதைக் குத்திச் செல்ல, வாழைத்தண்டுப் போலிருக்கும் உன் பாதமோ என்னை நொந்தல்லவோ தாண்டிச் செல்கின்றது. காளையை மிரட்டி ஒடுக்குகின்ற கணைகள், பாலை நிலம் போலிருக்கும் நெஞ்சம், சோலையென சுகமூட்டும் பருவம் எனத் தொடர்ந்திடும் ஆடவரின் கவித் துளிகள் அத்தனையும் தன் வலைக்குள் பெண்ணே உன்னை சிக்கவைக்கும் வெறும் வர்ணனைகளே.

இது அறியா மங்கையவள் வெட்கத்தில் தலைகுனியää ~~இங்கே தொலைத்துவிட்டு எங்கேயோ உன் மனதைத் தேடுகின்றாய்? தொலைத்த இடத்தில் தேடாமல் நினைத்த இடத்தில் கண்டுபிடிக்க சுதந்தர அழகியே நீயென்ன சுந்தரமூர்த்தியோ? ஆற்றிலிட்டதை அவரோ குளத்திலே தேடினார். எனக்குளிட்டதை பெண்ணே நீயோ நிலத்தில் தேடுகின்றாய்?- என வினாத் தொடுப்பான்.

~~அஞ்சி அஞ்சி காதல் செய்தால் கொஞ்ச வருமோ காலம். வஞ்சி உந்தன் கண்கள் என்னை கொல்ல வருமோ? துஞ்சி துஞ்சி நீ போனால் உனை சுமக்கும் நெஞ்சம்தான் தாங்கிடுமோ? பஞ்சுப்பஞ்சு மேனியது. நானின்றி தான் வாழ்ந்திடுமோ?" என்பான்.

பெண்ணவள் கவிதைக்குள் நனைந்து தன்னை மறந்து அவன் விழிகள் தீண்ட, "இதழ் பேசாத மொழியை உன் விழிகள் பேசுவது விந்தையோ? யான் நோக்கும் போது நீ தான் நோக்காத பாவையாவதும், நான் நோக்காத நேரம் உன் கண் நோக்கி உண்ணும் என்னை - மீட்பார் தான் யாரோ...?" என முறுவல் கொள்வான்.

"ஐயோ..." எனத் துடித்திடும் மங்கையவள் அறியாப் பருமதில் அவனருகில் சென்றதுமே, "பஞ்சு மெத்தை மேனியிலே சற்று தலை சாய்திட எண்ணுகிறது - கவி பாடி உன் செவ்விதழ்கள் விரித்திட வைத்ததில் உடலோடு மனமுமன்றோ சோர்ந்துவிட்டது" - என பெண்ணவளை தன் ஏமாற்றுவித்தையால் வளைத்திடுவான்.

"விழிகளால் உண்ட உன் உருவமது என் விரல்களுக்கு விருந்தாகாதோ கண்ணே? கனிந்த காதல் நமக்குள் குடிகொண்டுவிட்டபோது - இனி ஏன் நமக்குள் தயக்கம். உன் உயிரே நானானபோது, என் உடலே நீPயானபோது உன் மன்னவனை காக்க வைப்பதுதான் நியாயமோ - எனை அப்படி ஏங்கவைப்பதில் நீகாணும் சுகம் தான் என்னவோ? என அநியாயத்திற்குக் கெஞ்சிடுவான்.

அன்பை தன்னகத்தே கொண்டவள்ää காதலனே உயிரென வாழ்பவள் மங்கையவள் - மன்னவன் விருப்பிற்கு மறுதலிப்பளோ என்ன..? சற்றே சரிந்ததும் தேனருந்தும் வண்டாய் மாறி பெண்ணவளை முழுதும் பெற்றிடுவான். பின் மதுவுண்ட வண்டாய் மாறியவன் "காத்திரு கண்ணே கனிந்திட்ட காதல் என்றும் கலங்காது. காலங்கள் கரைந்தாலும், சோகங்கள் குடிகொண்டாலும் என்றோ ஓர் நாள் உன் மடிதனில் நானிருப்பேன். கவலை வேண்டாம் - நெஞ்சுக்குள் நீ வளர்க்கும் காதல் பயிர் செழிப்புற நினைவுக் காதலை நீராய் வார்த்திடு. வருவேன் ஒருநாள் உன்னை உரிமை கொள்வேன் அன்பே அதுவரை நம் காதல் நினைவுகள் நிரந்தரம் என்றும் உனக்குள்!" - என்று நம்பிக்கை வார்த்தை வீசி விட்டுச் செல்வான்.

மன்னவன் வருவான் - என் ரசணைகளை உணர்ந்து கவி வடிப்பான் - என ஏக்கங்களோடும், தனிமையோடும் காலம் நகர்த்தும் மங்கையவள் காந்திருந்து கனியும் பழுதாகி கடைசியில் நிலத்தோடு சேர்ந்திடும் நேரம் - சோகம் மாத்திரமே அவளுக்குச் சொந்தமாகிடும். தனிமை அவளைக் கொல்லாமல் கொன்றதும்ää தவிப்பு அவளை உயிரோடு மாய்த்ததும், தன் காதலன் கொடுத்த நன் கொடை என்பதை அவள் உள்ளமது மாத்திரம் அறிந்தவாறு ஏக்கத்தோடு நிலத்தோடு மாய்ந்திடும் நேரம் - கவியால் ஏமாற்றிய வண்டு வேறோர் பூவுக்குள் மதுவருந்திக் கொண்டிருப்பான். அடுத்த கவி வரிகளுக்கு சொற்கள் சேர்த்தவாறு.

பெண்ணே கவிபாடும் ஆடவர் காதல் என்றும் எழுதப்படாத வரிகளே அன்றி வேறொன்றுமில்லை. ஏமாற்றும் சொற்கள் அவர்களிடமிருந்து உருப்பெற்றது என்பதையும் உணர்ந்து வாழக் கற்றுக் கொள்.

-எஸ்.ஷபா.

No comments:

Post a Comment